நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர் சங்கத்தினால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும், கல்வி சுமையை பெற்றோர்கள் மீது சுமத்துவதை நிறுத்தி இதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் அடக்குமுறைச் செயற்பாடுகள், அத்துடன் அச்சுறுத்தும் அறிக்கைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இன்று அனைத்து அதிபர், ஆசிரியர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதிபர், ஆசிரியர்கள், முன்னெடுக்கும் சுகவீன விடுமுறைப் போராட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சில பாடசாலைகளில் இன்றைய தினம் அதிபர்கள், ஆசிரியர்கள் வருகைதந்துள்ள நிலையில் மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுவதாகவும், பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் திரும்பிச்சென்றதை காணமுடிந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.