அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சரவை எதிர்வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளது.
தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் குறித்து நான் முரண்படவில்லை.
எனினும் இந்த மூன்று தீர்மானங்களும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் இவை பாரதூரமானவை.
இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கும், வரிகளை குறைப்பதற்கும் உள்ளூராட்சிச் சபை
தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இரத்துச் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தபால்மூல வாக்களிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த அறிவிப்பு 14 மில்லியன் அரசாங்க ஊழியர்களை கவர்வதற்கான முயற்சி. சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்கம் ஒரு சதம் கூட சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் மூலம் தெரிவித்திருந்தது’ என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.