வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 338 பேர் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சில தரப்புகள் பதிவுத்தபாலில் அவற்றை அனுப்பியுள்ளதால் கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்களது தேர்தல் செலவு அறிக்கையை கடந்த 6ஆம் திகதி நள்ளிரவுக்கு இடையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
அந்தவகையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 14 அரசியல் கட்சிகள் மற்றும் 20 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 338 பேர் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் 25 சுயேச்சைக் குழுக்கள் என மொத்தமாக 48 தரப்புகளைச் சேர்ந்த 432 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.
அவற்றில் 5 சுயேச்சைக் குழுக்களினதும் 9 அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 14 பேரில் செலவுஅறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில தரப்புகள் பதிவுத்தபாலில் செலவு அறிக்கையை அனுப்பி வைத்துள்ள நிலையில் அவை கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.