எலிக்காய்ச்சல், டெங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கை மும்முரம்

0
30

நாட்டில் தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டு வரும் எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் விசேட சிரமதானம் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சபையுடன் இணைந்து இச்சிரமதான வேலைத் திட்டம் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த வேலைத் திட்டத்தில் உப பீடாதிபதி எம். சி. ஜூனைட், கல்வியியற் கல்லூரியில் பயின்று வரும் பெருந் தொகையான ஆசிரிய பயிலுநர்கள், சுகாதாரத் துறையினர், விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப் பலர் இந்தச் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது கல்வியியற் கல்லூரின் சுற்றுவட்டாரத்தில் உள்ள வடிகான்கள், கால்வாய்கள், நீரேந்து பிரதேசங்கள் போன்றன சுத்தப்படுத்தப்பட்டு டெங்கு நுளம்புகள் பெருகும் சூழலும், எலிகள் நடமாடும் இடங்கள் போன்றன சுத்தம் செய்யப்பட்டன.

இதேவேளை, கல்லூரியை அண்டிய பிரதேசத்தில் பற்றைக் காடுகளாய் சுற்றாடலுக்கு கேடு விளைவிக்கத் தக்க வகையில் வளர்ந்து காணப்பட்ட மரம் செடி கொடிகள் புற் பூண்டுகள் பொன்றன அழித் தொழிக்கப்பட்டு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதவிர டெங்கு நுளம்புகளின் தாக்கம் பற்றியும், எலிக்காய்ச்சலின் கேடுகள் தொடர்பிலும் விசேட ஆலோசனைகள் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டன.