யாழ்ப்பாணத்தில் தொடருந்துகள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த 3 சிறுவர்களை யாழ்ப்பாண காவல்துறையினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் வைத்துத் தொடருந்துகள் மீது கடந்த சில தினங்களாகக் கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. அந்த தாக்குதலில் தொடருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்ததுடன் பயணி ஒருவரும் காயமடைந்தார்.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தொடருந்து நிலைய அதிபரினால் யாழ்ப்பாண காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இதேவேளை தொடருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளி ஒன்றில் 3 சிறுவர்கள் தொடருந்து மீது கல் வீச்சுத் தாக்குதலை நடாத்துவது பதிவாகி இருந்தது.
குறித்த காணொளியின் அடிப்படையில் 3 சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சிறுவர்கள் மீது யாழ்ப்பாண காவல்நிலைய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.