”சிறைக் கைதிகளும் மனிதர்களே” தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்- சிறிதரன்

0
15

சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற வார்த்தைக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறிதரன் உரையாற்றியிருந்தார்.

4 விடங்களை முன்வைத்து நீதியமைச்சரிடம் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் வினவியிருந்தார்.

1.
தற்போது எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்?

2.
இந்த தமிழ் அரசியல் கைதிகள் எந்தெந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்?

3.
இவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்?

4.
மனிதாபிமான அடிப்படையிலோ, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையிலோ இவர்களை விடுதலை செய்ய முடியுமா?

என்ற கேள்விகளை சிறிதரன் சபையில் முன்வைத்தார்.

இந்த கேள்விகள் முக்கியமானவை எனவும் இந்த விடயம் தொடர்பில் முழுமையான விளக்கத்தை வழங்க தாம் எதிர்பார்ப்பதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

எனினும் பாதீட்டினுடைய செலவு அறிக்கையை நாளை சமர்ப்பிக்கவுள்ளதால் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே ஒருவார கால அவகாசம் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த சிறிதரன் எம்.பி அமைச்சரின் கருத்துக்கு தலைசாய்ப்பதாகக் குறிப்பிட்டார்.

மனிதாபிமான அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதேவேளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பெயரைக் குறிப்பிட்டும் அவர்களது விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த நீதியமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் குறிப்பிட்டவர்களின் பெயர் விபரங்களை இன்றைய தினம் தனக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.