மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை!

0
10

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தரமற்ற தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். வாய்மூல பதிலுக்கான கேள்வி நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுத்திகரிப்படாத தேங்காய் எண்ணெய்யைப் பெற்று உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யும் செயற்பாடுகளில் சில இறக்குமதியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் கணிசமான வருவாய் ஈட்டிய சில நிறுவனங்கள் 11 மாதங்களில் தங்களின் நிறுவனங்களை மூடியுள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும், அதனூடாக மோசடிகளைத் தடுப்பதற்கு வலுவான விதிகள் கொண்டு வரப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.