மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கடமை நேரத்தில் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்த நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு ஆரையம்பதி பொதுசுகாதார பிரிவில் கடமையாற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் அவரது கடமையில் ஈடுப்பட்டிருந்த வேளையில் ஆரையம்பதி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பரிசோதகர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் குறித்தநபர் தொடர்பாக முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.

இதேவேளை அச்சுறுத்தலை விடுத்த நபரை கைதுசெய்யும் வரை கொவிட் செயல்பாடு தொடர்பான பணி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக மாவட்ட பொதுசுகாதார பரிசோதகர் சங்க தலைவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நண்பகல் குறித்த நபரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்ததை அடுத்து மாவட்ட பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த கொவிட் செயற்பாட்டு பணி தொடர்ந்து இடம்பெறுவதாக மாவட்ட பொதுசுகாதார பரிசோதகர் சங்க தலைவர் சிவசேகரம் சிவகாந்தன் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.