அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் பலர் பயணத்தடைகளை மீறி செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


கல்முனை நகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பயணத்தடை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டாலும் சாய்ந்தமருது போன்ற புறநகர் பகுதிகளில் பயணத்தடையினை மீறியை வகையில் சிலர் செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது.


மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.


இதேவேளை, மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி, மீன் போன்ற பொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட நடமாடும் வியாபாரிகள் ஊடாக விற்பனை செய்யும் நிலையில் மீன், இறைச்சி விநியோகத்திற்காக அனுமதிகள் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளன.


சாய்ந்தமருது பகுதியில் நேற்றும் இன்றும் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு எந்த தேவைகளுக்காகவும் வீதிகளில் வாகனங்களில் பயணித்தல், இளைஞர்கள் குழுக்களாக சேர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வீதிகளில் வீணாக சுற்றித் திரிதல், மீன் பிடிப்பவர்களைத் தவிர ஏனையோர் கடற்கரைகளில் அனாவசியமாக கூடி இருத்தல், அத்தியாவசிய பொருட்களுக்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் அதிகமானோர் கூடி இருத்தல், கொரோனா சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வீதிகள் மற்றும் மைதானங்களில் இளைஞர்கள் விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


எவ்வாறாயினும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இவ்விடயம் தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.