மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் மீள்குடியேற்ற கிராமமாகவும் நூறு வீதம் வறுமையில் வாழும் மக்களைக்கொண்ட கிராமமாகவும் காணப்படுகின்றது.
குறித்த கிராமத்தில் குடிநீர் பிரச்சினை வீதிப்பிரச்சினையுட்பட பல்வேறு பிரச்சினைகளை தினமும் குறித்த பகுதி மக்கள் எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர்.
கரடியன்குளம் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளபோதிலும் இதுவரையில் பாடசாலையொன்று இல்லாத காரணத்தினால் பொதுக்கட்டிடம் ஒன்றிலேயே பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலையொன்று அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் அவை மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிராம மாணவர்கள் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வீதிகள் மிக மோசமான நிலையிலிருப்பதனால் பொது போக்குவரத்துகள் எவையும் நடைபெறாத நிலையில் அவர்கள் பாடசாலை செல்வதையே நிறுத்தும் நிலையுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் உள்ள கரடியன்குளத்தில் அதிகளவானோர் வாழ்வாதாரமாக கொண்டுள்ளபோதிலும் சிலரின் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த குளம் உள்ளதனால் தம்மால் பிடிக்கப்படும் மீன்களுக்கு நியாயமான விலையும் கிடைப்பதில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது பகுதிகளை அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் தொடர்ச்சியாக புறக்கணித்துவருவதாக குற்றஞ்சாட்டும் கிராம மககள் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகளுடன் வாழும் தமக்கு தீர்வுகளைப் பெற்றுத்தர அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.