நாடளாவிய ரீதியில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற விபத்துக்களில், 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று, பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26) ஊடகங்களுக்கு வழங்கிய விசேட காணொளிப் பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளனர்.
நேற்றை தினத்தில் மட்டும் ஆறு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
வாகன சாரதிகளின் கவனயீனம் காரணமாகவே இந்த ஆறு விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக நேற்றைய தினம் வெலிக்கேபொல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனமொன்று அதிக வேகத்தில் பயணித்ததன் காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதேபோன்று, மோட்டார் சைக்கிளொன்று அதிக வேகத்தில் பயணித்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி சென்று மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மரணமடைந்தார்.
அதேபோன்று முச்சக்கர வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதேபோன்று தனமல்வில பிரதேசத்தில் பஸ்ஸொன்றும் காரொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிகாலை வேளையில் வாகனத்தை செலுத்துபவர்கள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும்.
ஏனெனில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சாரதிகளுக்கு நித்திரைக்கலக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் விபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்.
இந்த விபத்தின்போது காருக்குள் சிறுவர்களும் இருந்துள்ளனர். இவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாரதிகளின் கவனயீனம் காரணமாகவே விபத்துக்கள் இடம்பெறுகின்றன.
பாதுகாப்பற்ற பயணம் காரணமாக சாரதிகளின் உயிர் மற்றுமன்றி வாகனங்களில் பயணிப்பவர்கள், வீதிகளில் பயணிப்பவர்களும் உயிரிழக்கும் நிலைமை ஏற்படுகிறது.
அதேபோன்று சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுகின்றது.
எனவே மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நாம் சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.