ஊடகவியலாளர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – எஸ்.எம்.மரிக்கார்

0
216

ஐக்கிய மக்கள் சக்தி என்ற முறையில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி என்றவகையில் நாட்டின் ஜனநாயகம், மனித உரிமை, அதேபோன்று அடிப்படை தேவைகள், ஊடக சுதந்திரம் என்பவற்றை இந்த நாட்டில் உறுதி செய்யும் என்பதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டு ஊடகவியலாளர் மீதான இந்தத் தாக்குதல் சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து 2015ஆம் ஆண்டுக்கு முன்பு கீத் நொயார், உபாலி தென்னக்கோன், போத்தல ஜயந்த ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நினைவுக்கு வருகின்றது. அதுமட்டுமன்றி பிரகீத் எக்னொலிகொட காணாமல் ஆக்கப்பட்டார்.

அத்துடன் லசந்த விக்ரமதுங்கவுக்கு பிரதான வீதியிலேயே உயிரைவிட நேர்ந்தது.

ஒரு செய்தி அறிக்கையிடலுக்காக ஊடகவியலாளர்கள் எவ்வாறான அச்சுறுத்தலை எதிர்கொள்வார்கள் என்பதை ஊடகவியலாளர் என்ற முறையில் நானும் அறிவேன்.

நாடு பொருளாதார ரீதியில் வங்ரோத்து அடைந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பிலான பிரச்சினை எழுந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எமது நாடு நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ள இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலை எவ்வகையிலும் அனுமதிக்கவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

அதேபோன்று இது எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயற்பாடாகும்.