தற்போதைய அரசாங்கத்துக்கு உதவுவதற்கு நாடுகள் தயாராக இல்லை- எதிர்க் கட்சித் தலைவர்

0
136

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நிவாரண முறையில் நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்க மூன்று நாடுகள் முன்வந்துள்ளன. எனினும் தற்போதைய அரசாங்கத்துக்கு அந்த உதவியை வழங்குவதற்கு தயாராக இல்லை என்று அந்த நாடுகள் கூறிவிட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘உலக வனஜீவராசிகள் தினத்தை’ முன்னிட்டு யால நலன்புரி மற்றும் ஒத்துழைப்புச் சங்கத்துக்கு 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் தொலைக்காட்சியை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில், கலந்துகொண்டு கருத்து தெரிவிககும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நாடுகள் உதவ முன்வராமைக்கு தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி நிலைப்பாடே காரணமாகும்.

கடந்த காலங்களில் இன, மத பேதங்களை உருவாக்கி, நாட்டு மக்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்தி நாட்டை இந்த அரசாங்கம் சீரழித்துவிட்டது.

வீழ்ச்சியடைந்த இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எனக்கு முடியும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான திறமை எனக்கு இருக்கின்றது.

நாடு எதிர்கொண்டுள்ள கடுமையான நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும். ஊழல், மோசடிகள் மற்றும் அடக்குமுறைகள் இன்றி அதற்கான உண்மையான அர்ப்பணிப்பையும் மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் பாரிய எரிபொருள் பிரச்சினை ஏற்படும் என்பதை நாம் இரண்டு வருடங்களுக்;கு முன்பே அறிந்துகொண்டோம். தற்போது இருப்பர்வர்கள், இன்று, நேற்றே தெரிந்துகொண்டுள்ளனர்.

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமெனில், நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனில் கிணற்றுக்குள் இருந்து அதனை செய்ய முடியாது. உலகம் முழுவதும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும். நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நாட்டு வளங்களை விற்பனை செய்வததை நான் இதற்கூடாக கூற முனையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.