நாவிதன்வெளியில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

0
154

நாவிதன்வெளி பிரதேச செயலகம், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு பிரதேச மட்ட மகளிர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விற்பனை கண்காட்சி மற்றும் பெண் சுய தொழில் முயற்சியாளர்களை பாராட்டி
கௌரவிக்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் எஸ் ரங்கநாதன் தலைமையில் இன்றுநடைபெற்றது.

இங்கு ‘நிலையான எதிர்காலத்திற்காக பால்நிலை சமத்துவம் பேணல்’ எனும் தொனிப்பொருளில் விழிப்பூட்டல் வீதி ஊர் ஊர்வலம் இடம்பெற்றதுடன் பெண் சுய தொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சிக் கூடங்களை அதிதிகள் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் பிரதேச மட்டத்தில் சேவையாற்றும் மகளிர் சங்கங்கள், நீண்டகாலமாக அங்கத்தவர்களாக இருந்து சிறப்பான சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்ற பெண்கள் பாராட்டி
கௌரவிக்கப்பட்டதுடன், 2022 ஆம் ஆண்டிற்கான
சிறந்த பெண் முயற்சியாக தெரிவுசெய்யப்பட்ட நாவிதன்வெளி மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த யூ. நஸ்லியா அதிகாரிகளினால் நினைவுச்சின்னம், பரிசுப் பொருட்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்விற்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட தர நிர்ணய நிலையப் பணிப்பாளர், தாவரவியல் பேராசிரியர் எம்.ஐ.எஸ்.சபீனா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் கலந்துகொண்டார்.

நாவிதன்வெளி பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. சித்தி சிபாயாவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர். லதாகரன், சவளக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.எம். அஸ்ரப், இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் ரி. ரமேஷ் உட்பட பிரதேச அதிகாரிகள், மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.