27.1 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் காணாமல்போன மூவரில் யுவதியொருவரின் சடலம் மீட்பு!

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
யுவதி ஒருவரும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேருந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பகுதியான இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பேருந்தை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு இளைஞர், யுவதிகள் குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.
இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றுள்ளனர். செல்பிகளை எடுத்தும் மகிழ்ந்துள்ளனர். எனினும், அவர்களின் சந்தோசம் நீடிக்கவில்லை.
திடீரென நீர்வீழ்ச்சி – ஆற்றுப் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்ததால் அவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் கூக்குரல் எழுப்ப, அப்பகுதியில் இருந்து சிலர் அங்கு சென்றுள்ளனர். அதற்குள் 4 யுவதிகளை அவர்களுடன் சென்ற இளைஞர் காப்பாற்றி கரைசேர்த்துள்ளார். ஏனைய இரு யுவதிகளையும் காப்பாற்ற முற்பட்டவேளையிலேயே மூவரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொத்மலை பொலிஸார், நுவரெலியா மாவட்ட இராணுவ முகாமின் இராணுவத்தினர், கடற்படை சுழியோடிகள் சம்பவ இடத்துக்கு சென்று, மீட்பு பணிகளை ஆரம்பித்தனர். இந்நிலையில் இன்று காலை யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த 18 வயதுடைய புவனேஸ்வரன் வினோதனி, வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதடைய பொன்னுதுரை மதுசாலினி ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த 21 வயதுடைய விதுசான் ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரின் சடலம் கற்பாரையொன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதியின் சடலம் மீதான மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சடலம் கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மலைநாட்டில் தற்போது கடும் மழை பெய்துவருகின்றது. எனவே, நீர்வீழ்ச்சி மற்றும் ஆறுகளின் நீர் மட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும். எனவே, சுற்றுலா வருபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இறம்பொடை நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் அறவிடப்பட்டாலும், அப்பகுதியில் எவ்வித எச்சரிக்கை அறிவித்தல்களும் இல்லை, மக்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதும் இல்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வருடாந்தம் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுவது வழமையாகிவிட்டதெனவும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் உரிய கவனம் செலுத்துவதில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles