தலைநகர் கொழும்புக்கு வெளியிலிருந்து வெளியான முதல் தேசிய தினசரி ‘ஈழநாடு’,
1959 பெப்ரவரியில் யாழ்பாணத்தில் வாரப் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டது. கிழக்கிலங்கை கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவிருந்த பெரியார் கே. சி. தங்கராசாவும் அவரது சகோதரர் டாக்டர் கே. சி. சண்முகரத்தினமும் ஆரம்பித்த இப் பத்திரிகை, யாழ்ப்பாணத்து மண் வாசனையுடன், விடியல்பொழுதுகளில் ஒவ்வோர் இல்லங்களிலும் ஆவலானதொன்றாயிற்று.
தமிழ் மக்களின் பண்பாட்டு வடிவங்களுடன், அவர்களின் அரசியல் உரிமைகளிலும் ‘ஈழநாடு’ வெளிப்படுத்திய கவனம், கொழும்பு தினசரிகளை உசார் நிலைக்குள்ளாக்கியது. 1961இல் நடைபெற்ற சத்தியாகக்கிரக போராட்டம், வாரமிருமுறையாக வெளிவந்துகொண்டிருந்த பத்திரிகையை தினசரியாக மலரவைத்தது
‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ பத்திரிகையில் பணியாற்றி, ‘வீரகேசரி’யின் ஆசிரியராக விளங்கிய கே. பி. ஹரன், ஆரம்ப காலம் முதல் பல ஆண்டுகள் ஆசிரியராகவிருந்தார். பின்னர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராகவிருந்து ஓய்வுபெற்ற கல்விமான் என். சபாரத்தினம் அப் பணியில் அமர்ந்தார்.
தனித்துவமான பல சிறுகதை எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமை ‘ஈழநாடு’ ஆசிரிய பீடத்தைச் சார்ந்தது. ‘ஈழநாடு பத்திரிகைப் பாணி’ என்ற ஒன்று அடையாளம் பெற்றது.
சமூக நீதியுடன் வாழ்வில், ஆன்மீகத்தையும் விளைந்த ‘ஈழநாடு’ முதற் பிரதியைப் பார்த்த யாழ்ப்பாணத்து தவ முனிவர் யோகர் சுவாமிகள், “ஏசுவார்கள், எரிப்பார்கள், அஞ்சவேண்டாம்: உண்மையை எழுதுங்கள், உண்மையாய் எழுதுங்கள்’’ என்றார்.
அப்படியே நடந்தது.
இப்போது, மீண்டும் தன் பணியில் ‘ஈழநாடு’ தலைப்பட்டிருக்கிறது.
Home About us