“மினுவாங்கொட கோரோனா பரவலையடுத்து கொரோனா தொற்றுள்ளோருடன் முதல்நிலைத் தொடர்புடையவர்களைக் கண்டறியும் செயற்பாடு நிறைவடைந்துள்ளது. எனினும் கொழும்பு மாவட்டத்தில் தொற்றுள்ள அல்லது சந்தேகத்துக்கு இடமான எவரும் இல்லை” என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் சுதத் அமரவீர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மொனராகல, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டத்திலேயே கொரோனா பாதித்தோருடன் முதல்நிலைத் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலையடுத்து சுகாதாரத்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த முதல்நிலைத் தொடர்பாளர்கள் (தொற்றுள்ளவருடன் நேரடித் தொடர்புடையவர்கள்) அடையாளப்படுத்தலிலேயே இந்த முடிவு கிடைத்துள்ளது.
எனினும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொடர்புடையவர்களை அடையாளப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்றும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் கூறினார்.
கொரோனா தொற்றுடைய எவருமே கொழும்பில் இனம்காணப்படவில்லை
புத்தளத்தில் ஒரு வாரத்தில் 4098 கிலோ பீடி இலைகள் மீட்பு – நால்வர் கைது
புத்தளம் , கற்பிட்டி – வன்னிமுந்தல், இலந்தையடி மற்றும் தளுவ ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 4098 கிலோ 500 கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கெப் வண்டி, லொறி என்பனவற்றுடன் டிங்கி இயந்திர படகு மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 24, 25 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கற்பிட்டி, இலந்தடிய கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான தம்பபண்ணி கடற்படையினர் கடந்த வாரம் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 2223 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பீடி இலைகள் 70 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், இதற்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கற்பிட்டி வன்னிமுந்தல் கடற் பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, 19 உரைப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 639 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், இதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி இயந்திர படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பெயரில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் புத்தளம் – தளுவ கடற்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (26) இரவு சந்தேகத்திற்குரிய முறையில் நிறுத்தி வைக்கப்ப லொறியொன்றை பரிசோதனை செய்த கடற்படையினர் அந்த லொறியில் இருந்து 1236 கிலோ 500 கிராம் பீடி இலைகளை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் , லொறி, கெப் வண்டி மற்றும் டிங்கி இயந்திர படகு என்பவற்றுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடமும், மதுரங்குளி பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த, கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது
மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.
ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவிப்பிரதேச செயலாளர் துலாஞ்சனன் கலந்துகொண்டதுடன் ஆலைய வழிபாட்டிலும் பூசைகளிலும் கலந்துகொண்டு ஆலையத்திற்கு தேவையான உதவிகளையும் கிராமத்திற்குள் உள்ள சிறு வீதிகளையும் முடிந்தளவுக்கு செப்பனிட்டுதருவதாகவும் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள காணொளியில் இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்
அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.
கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக் கொண்டிருப்பதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு வேளையில் கூட காட்டு யானைகளின் நடமாட்டம் கிராமத்தில் காணப்படுவதனால் இரவு வேளையில் நடமாடுவதற்கு கிராம மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்வதாக தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கும் கிராமவாசிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.
கல்முனை மாநகர சபையினால் சேகரிக்கப்படும் கழிவு குப்பைகளை இக்கிராமத்தின் மேற்கு புறத்தில் கொட்டுவதால் அதனை உண்பதற்கு காட்டு யானைகள் வருவதாகவும் இங்கு குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தினம் இன்று
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வு கோலாகலமாக இன்று கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பட்டில் கல்லூரியின் அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் தலைமையில் இடம்பெற்ற கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வில் மாணவர்களினால் அதிதிகள் வரவேற்புடன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் ஆண்டகை இணைந்து விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து புனித மிக்கேல் கல்லூரியின் ஸ்தாபகர், கல்லூரி முன்னால் மறைந்த அதிபர்கள், மறைந்த அருட்தந்தையர்களை கௌரவ பட்டுத்தும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கல்லூரி கொடியேற்றப்பட்டு கல்லூரி தின நினைவுறைகள் இடம்பெற்றன.
புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில் கல்லூரியின் 150வது ஆண்டு நினைவு முத்திரை ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், கல்லூரி வரலாற்று நினைவு நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.
அம்பாறை நிந்தவூரில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வறிய குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிக்கப்பட்டது
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் வறிய குடும்பம் ஒன்றுக்கு பகுதியளவாக நிர்மானிக்கப்பட்ட வீடு இன்று அரச சார்பற்ற நிறுவனமான பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் இன்று கையளிக்கப்பட்டது.
அமைப்பின் தலைவர் ஐ.எம்.நிஸ்மி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.அப்துல் லத்தீப், பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீட்டினை கையளித்தார். நிந்தவூர்-7ம் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தந்தை இல்லாத, வீட்டு வசதியற்ற, திருமண வயதை அடைந்த பபயனாளி ஒருவருக்கே வீடு நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் பெண்கள் தலைமை தாங்கும் மற்றும் நலிவுற்ற குடும்பங்களுக்கு உதவி
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் மற்றும் நலிவுற்ற குடும்பங்களில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு மக்கள் நல செயல்பாடுகள் சேர்கிள் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு அமைவாக செங்கலடி ஏறாவூர் பற்று, வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி, மண்முனை மேற்கு வவுணதீவு ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் 50 குடும்பங்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வு சேர்கிள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தலைமையில் இடம் பெற்றது. இம் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வௌ;வேறு நிகழ்வுகளாக இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதேச செயலகங்களின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கிராம சேவகர்கள், என முக்கிய அரச அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களின் கல்வி சுற்றுலா இன்று காலை திருகோணமலை நோக்கி ஆரம்பமானது.
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களின், கல்வி சுற்றுலா ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து, திருகோணமலை நோக்கி இன்று காலை ஆரம்பமானது.
இதன்போது, வெருகல் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம், திருகோணமலையில் அமைந்துள்ள ஸ்ரீ லெட்சு நாராயணர் ஆலயம், கன்னியா வெந்நீர் ஊற்று உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று தரிசித்து அதன் சிறப்புக்கள் மற்றும் தொன்மை பற்றி மாணவர்களுக்கு விளக்மளிக்கப்படவுள்ளது.
இவ் அறநெறி கல்வி சுற்றுலாவில் ஆலய வண்ணக்கர் தியாகராஜா விக்கிரமன், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், வண்ணக்கர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றினர்.
கிழக்கின் முதலாவது மகப்பேற்று வைத்திய நிபுணர் என்ற பெருமையினைக் கொண்ட வைத்தியர் சீ.தங்கவடிவேல் காலமானார்
கிழக்கு மாகாணத்தின் முதலாவது மகப்பேற்று வைத்திய நிபுணர் என்ற பெருமையினைக் கொண்ட வைத்தியர் சீ.தங்கவடிவேல் காலமானார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய கல்லாறை சேர்ந்த இவர் இலங்கையின் பல பாகங்களிலும் கடமையாற்றிய போதிலும் தனது பெருமளவான காலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணராக கடமையாற்றியுள்ளார்.
கிழக்கு மாகாண மக்களினால் நேசிக்கப்பட்ட ஒருவராகவும், யுத்த காலத்தில் மிகவும் அர்ப்பணிப்பு மிக்க சேவையினையும் செய்து, ஓய்வுபெற்ற வைத்தியர் தங்கவடிவேல் அவர்கள் தனது 84 வயதில் காலமானார்.
இவரது பூதவுடலுக்கு மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
காலிஸ்தான் ஆபத்து
இந்தியாவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் ரைகர் போஸ் – எனப்படும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து கொல்லப்பட்டார்.
இரண்டு மாதங்கள் கழித்து கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இதற்கு பின்னால் இந்திய முகவர் இருந்ததற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன என்று கூறுகின்றார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர நெருக்கடிகள் அதிகரித்திருக்கின்றன.
குற்றச்சாட்டை முன்வைத்த கனடிய பிரதமர் ட்ரூடோ இதுவரையில் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை.
இதற்கிடையில் காலிஸ்தானியர்களும் எங்களை போன்று விடுதலைக்காக போராடும் மக்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென்று கூறும் – தமிழ் குரல்களையும் காணமுடிகின்றது.
தமிழ் சூழலில் நுனிப்புல் மேய்ப்பவர்கள் அரசியல் கருத்துகளை முன்வைக்கக் கூடியவர்களாக இருப்பதானது தமிழர் அரசியலை பீடித்திருக்கும் ஒரு சாபக்கேடாகும்.
காலிஸ்தான் பிரிவினைவாத தரப்புகளை ஈழத் தமிழர்கள் ஆதரிக்கலாமா? இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், சீக்கியர்களுக்கான தனிநாடு ஒன்றை கோரிவரும் தரப்பினரே காலிஸ்தான் பிரிவினைவாதிகளாவர்.
இந்திய மாநில ஆட்சி முறைமையானது – அனைத்து இன மக்களுக்கும் போதிய அதிகாரங்களை வழங்கியிருக்கின்றது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு பிரத்தியேக பிரச்னைகள் எதுவுமில்லை.
எனினும், சீக்கியர்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து இவ்வாறான காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு வெளியில் செயல்பட்டுவருகின்றனர்.
அவ்வாறான காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கனடா ஒரு பாதுகாப்பான அரணாக செயல்பட்டு வருவதாக இந்தியா நீண்டகாலமாக குற்றஞ்சாட்டி வருகின்றது.
இந்தியாவுக்கு எதிரான பல்வேறு விடயங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்திக் கொண்டிருந்தவர்களில் முக்கியமான ஒருவரே தற்போது கொல்லப்பட்டிருக்கின்றார்.
குறித்த நபரின் கொலைக்கு பின்னால் பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பட்டிருக்கலாம் என்னும் புலனாய்வு தகவலை எக்கனொமிக் ரைம்ஸ் வெளியிட்டிருக்கின்றது.
பாகிஸ்தானுக்கும் காலிஸ்தான் செயல்பாட்டாளர்களுக்கும் இடையில் நெடுங்கால தொடர்பு உண்டு.
1971இல் இந்திய – பாகிஸ்தான் யுத்தத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததிலிருந்து காலிஸ்தான் தீவிரவாதத்தை வளர்ப்பதன் ஊடாக இந்தியாவை உடைக்கும் வேலைத் திட்டமொன்றை பாகிஸ்தானிய வெளியக உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. முன்னெடுத்து வருகின்றது.
புலனாய்வு தகவல்களின்படி, தற்போது கொல்லப்பட்டிருக்கும் காலிஸ்தான் தலைவர் 2012இல், பாகிஸ்தானுக்கு சென்று வெடிகுண்டுகளை கையாளும் விசேட பயிற்சிகளை பெற்றிருந்தாரெனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
காலிஸ்தான் தனிநாட்டுக் கோரிக்கையை வலுவடையச்செய்வதில் பாகிஸ்தானின் கரங்கள் இருக்கின்றன. – இதே போன்று, சுதந்திர காஷ்மீருக்கான சர்வஜன வாக்கெடுப்பையும் பாகிஸ்தான் வலியுறுத்தி வருகின்றது.
பாகிஸ்தானின் இந்த நகர்வுகள் விடுதலைக்கானதல்ல மாறாக இந்தியாவை உடைத்து பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளே இவைகள்.
இதனை புரிந்துகொள்ளாமல் காலிஸ்தானியர்களை விடுதலைப் போராளிகளென்று ஈழத் தமிழர்கள் எவரேனும் கூறுவார்களாயின் அவர்கள் – அரசியலை அறியாதவர்கள் – அதேவேளை தாயகத்தில் வாழும் மக்களின் எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் அக்கறையில்லாதவர்கள்.