ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான இறுதித்தீர்மானம் இன்றைய தினத்துக்குள் அறிவிக்கப்படும் என கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கமையஇ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 2 ஆசனங்களும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும் கிடைப்பெற்றன.
அதன்படி கிடைக்கப்பெற்ற ஒற்றை தேசியப் பட்டியல் ஆசனத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் தலைமையகமான தாருஸ்சலாமில் நேற்று (19) விரிவான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களும் கலந்துகொண்டதுடன் தேசியப்பட்டியல் ஆசனத்துக்கான பல முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.குறித்த முன்மொழிவுகளின் பிரகாரம் தேசியப்பட்டியல் ஆசனத்துக்கான உறுப்பினர் தொடர்பில் குறும்பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒற்றை தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக நியமிக்கப்படவுள்ள உறுப்பினர் தொடர்பான தீர்மானம் இன்றைய தினத்துக்குள் அறிவிக்கப்படும் என கட்சியின் தகவல் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.அவ்வாறு ஒரு ஆசனம் வழங்கப்படுமாயின் குறித்த ஆசனத்துக்காகக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.