அம்பாறை பொத்துவில் சர்வோதயபுரம் வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை

0
128

அம்பாறை பொத்துவில் சர்வோதயபுரம் வீதி அபிவிருத்திப் பணிகளை பூர்த்தி செய்து மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை பொத்துவில் பிரதேச செயகப் பிரிவில் இடைநிறுத்தப்பட்டுள்ள சர்வோதயபுரம் வீதியின் அபிவிருத்திப் பணிகளை மீளவும் ஆரம்பித்து வீதியை மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்து நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்வோதயபுரம் ஆத்திமுனை பாலத்தடியில் இருந்து சென்று பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக தமது சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டு சுமார் 12கிலோமீற்றர் நீளமான வீதி புனரமைக்கும் வேலைகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் சுமார் 5 கிலோமிற்றர் நீளமான வீதியின் அபிவிருத்திப் பணிகள் நிறைவு பெற்று இருந்த நிலையில் வீதியின் மீதி 7கிலோமீற்றர் நீளமான அபிவிருத்திப் பணிகள் இடம்பெறாது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு சென்ற ஆர்பாட்டக்காரர்கள் உதவி பிரதேச செயாளர் இஸ்மாயில் பிர்னாஸ் இடம் தமது கோரிக்கை மகஜரை கையளித்து இருந்தனர்.