இந்தியாவை நட்பு சக்தியாக கருதினால்…!

0
15

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வடக்கு, கிழக்கில் இந்தியா தவிர வேறு எவரையும் அனுமதிக்கமாட்டோம் என்று தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்திருக்கிறார். மறுபுறம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சத்தியலிங்கமோ மன்னாரில் அதானி திட்டத்தை மக்கள் எதிர்க்கின்றனர் என்று பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஒருவர் இந்தியாவை மட்டுமே ஆதரிப்போம் என்கிறார் இன்னொருவரோ, மக்கள் அதனை எதிர்க்கின்றனர் என்கிறார். மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை அதானி நிறுவனமே கைவிட்டுவிட்டது. எனினும், அதானி நிறுவனம் வெளியேறுவதாகக் கூறிய பின்னரும் அரசாங்கம்தான் அதானியை துரத்துகிறது. அதானி குழுமம் போன்ற சர்வதேச முதலீட்டு நிறுவனத்துக்கு மன்னார் போன்ற இடமொன்றில் முதலீடு செய்வதால் வர்த்தக ரீதியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இலாபம் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அதானி குழுமத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு சிறிய முதலீடு.

எனினும், இலங்கையின் வடக்கு – கிழக்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கரிசனையோடு தொடர்புடைய அயலகப் பகுதியாகும். இந்த அடிப்படையில்தான் இந்தியாவின் பிரதான முதலீட்டுத் திட்டங்களுக்கான பகுதியாக வடக்கு – கிழக்கு அதிக கவனத்தைப் பெற்றிருக்கிறது. இதன் காரணமாகத்தான் சிங்கள கடும்போக்குவாதத்தரப்புகளும் இந்தியாவின் வடக்கு – கிழக்கு முதலீட்டுத் திட்டங்கள் மீது மட்டும் கண்வைக்கின்றனர். இந்த விடயத்தில் வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஈழத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எவ்வித கரிசனையும் இருந்ததில்லை.

அவ்வப்போது இந்திய தூதரகத்தைத் திருப்திப்படுத்திவிடலாம் என்னும் நோக்கில் சீனா தொடர்பில் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர, அவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான பரிந்துரைகளோ, யோசனைகளோ முன்வைக்கப்படுவதில்லை. இந்தியத் தூதரக அதிகாரிகள் எதனையும் அறியாமல் இருக்கின்றனர் என்பது போல்தான் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கொள்வதுண்டு. மன்னார் காற்றாலை மின்திட்டம் போன்றுதான் சம்பூர் அனல் மின் நிலையத் திட்டம் தொடர்பிலும் சத்தங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் அது கைவிடப்பட்டது. அந்த நேரத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இரா. சம்பந்தன், தனது இறந்த உடலின்மீதுதான் அந்த நிலையத்தை நீங்கள் கட்ட வேண்டிவரும் என்று – அப்போது, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான தகவல்களை, அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தர்மலிங்கம் சித்தார்த்தன் முழுவதுமாக அறிவார். ஆனால், அந்தத் திட்டத்தைக் கைவிட்டு அதற்குப் பதிலாக காற்றாலை மின் திட்டம் ஒன்றை சம்பந்தன் இந்தியத் தூதரகத்திடம் பரிந்துரைக்கவில்லை. மாறாக ரணில் விக்கிரமசிங்கவிடமே தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். ஏனெனில், சம்பந்தன் உதட்டளவில்தான் இந்தியாவுடன் இருந்தார். இது தொடர்பில் இந்தியத் தூதரகம் அப்போது அதிருப்தியடைந்திருந்தது. அதேபோன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லிக்கு அழைத்த போது, மாவையின் மகனுக்குத் திருமணம் என்று கூறி, மோடியின் அழைப்பை அவமதித்திருந்தார்.

இந்தியாவின் திட்டங்கள் தொடர்பில் பிரச்னைகள் இருப்பின் அது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் இந்தியத் தூதரகத்துடனல்லவா பேச வேண்டும். மாறாக, பொதுவெளிகளில் விவாதிப்பதன் பொருள் என்ன? ஒரு நட்பு சக்தியை இவ்வாறு எதிர்கொள்வதில்லை. உண்மையான பிரச்னை வேறு – அதாவது, பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதட்டளவில் இந்தியாவுக்கு ஆதரவானவர்களாகத் தங்களைக் காண்பித்துக் கொண்டாலும்கூட, அவர்களின் உண்மையான கரிசனையோ பாராளுமன்ற கதிரை மட்டும்தான். தற்போது சத்தியலிங்கம் தெரிவித்திருக்கும் கருத்து இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.