கறுவாச் செய்கைக்கு உரிய விலை இன்மை காரணமாக கறுவாச் செய்கையாளர்கள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, தேசிய பாவனையாளர் முன்னணியின் காலி மாவட்ட உறுப்பினர் கே.பி.சரத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தென் மாகாணம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் கறுவாச் செய்கையை மேற்கொண்டு வரும் தரப்பினர் பாரிய நெருக்கடிகளை தற்போது சந்தித்துள்ளனர்.
தேயிலை, தெங்கு, கறுவா என்பன எமது நாட்டின் பிரதான விவசாயப் பயிர்களாகக் காணப்படுகின்றன.
இந்தப் பயிர்களின் ஏற்றுமதியூடாக டொலர் வருமானம் என்பது எமது நாட்டுக்கு அதிகமாகக் கிடைக்கின்றது.
ஒரு பிடி கறுவாவானது 4700 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது 2,700 ரூபாய்க்கே பெற்றுக்கொள்கின்றனர்.
2,000 ரூபாயை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
200 கிலோகிராம் கறுவாயைக் கொண்டு சென்றால் 50 கிலோகிராமுக்கான பணமே கைகளில் கிடைக்கின்றது. ஆறு மாத உழைப்பு என்பது வீணடிக்கப்படுகின்றது.
கறுவாச் செய்கையை மேற்கொண்டு எமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளவே நாம் முயற்சிக்கின்றோம்.
எனினும் கறுவாவுக்கான உரிய விலை இன்மையால் நாம் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம்.
ஆறு மாத உழைப்பினூடாக எமது குடும்பத்தை பாதுகாக்கவே நாம் முயற்சிக்கின்றோம்.
கறுவாச் செய்கையாளர்கள் தற்போது எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையீடு செய்ய வேண்டும்.
கறுவாயை கடைகளுக்கு கொண்டு சென்றால் கறுவாப்பட்டை அதிகமாக விற்பனையாவதில்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாலில் ஒரு பங்கையே கறுவாவுக்கு வழங்க முடியும் விருப்பமெனில் தந்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறுகின்றார்கள்.
கறுவாச் செய்கை என்பது முற்றுமுழுதாக செயலிழந்துக் காணப்படுகின்றது.
எனவே ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையிட்டு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.