எக்ஸ்பிரஸ் பேல் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட முடியாது

0
260

எக்ஸ்பிரஸ் பேல் கப்பலினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட முடியாது என்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பேல்ஸ் கப்பலிலிருந்து 10,000 கோடி ரூபாயை நட்டஈடாக பெற்றுக்கொண்டாலும் அதனால் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

கப்பல் தீப்பற்றியமைக்கான காரணமும் கப்பலை இலங்கைத் தீவுக்குள் அனுமதித்தவர்கள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கப்பல் தீயால், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் அரசாங்கம் அதிகபட்ச கவனத்தை செலுத்தியுள்ளது.

கப்பல் கடலில் மூழ்குமாயின் அதிலிருந்து வெளியேறும் எண்ணெய்க் கழிவுகள், சுற்றுச் சூழலுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

‘கப்பல் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதில், விஞ்ஞானிகளின் கருத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கப்பலை ஆழ்கடலில் இருந்து மேற்பரப்புக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இலங்கை கடற்பரப்பில் இவ்வாறானச் சம்பவங்கள் மீண்டும் பதிவாகுமாயின் ஏற்படும் சேதங்களைத் தடுப்பதுத் தொடர்பில் அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.