ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு தொகுதி வேட்பாளர்களது பெயரை நீக்கிவிட்டு ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தரப்பினரை உள்வாங்குவதற்கு முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட தரப்பினர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டதாக அக்கட்சியின் லுனுபொக்குன அமைப்பாளர் கே.என்.சுரஞ்சி லக்சிறி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வடகொழும்பு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களது பெயர்களை நீக்கிவிட்டு ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட திருடர் கூட்டமொன்றை உள்வாங்குவதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
வடகொழும்பின் பிரதான அமைப்பாளரான சி.வை.பி.ராமுடன் இணைந்து கடந்த மூன்று, நான்கு நாட்களுக்கு முன்னர் எதிர்க் கட்சி காரியாலயத்தில் வேட்பாளர்களின் கையொப்பத்துடன் வேட்பாளர்களது பெயரை நாம் கையளித்தோம்.
இவ்வாறு அந்த பட்டியலை கையளித்த நாள் முதல் நேற்று முன்தினம் இரவு வரை சகல தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களையும் பாதுகாத்த நிலையில் அவ்விடத்திலேயே நின்றிருந்ததோம்.
இவ்வாறான சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் வடகொழும்பு தொகுதியின் வேட்பாளர் பட்டியலை அவர்களது அழுத்தத்தை பயன்படுத்தி மாற்றினர்.
வடகொழும்பு தொகுதி வேட்பாளர்களது பெயர்களை நீக்கிவிட்டு ஐக்கிய தேசிய கட்சியால் விரட்டியடிக்கப்பட்டு ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்வாங்கப்பட்ட திருடர்கள் கூட்டத்துக்கு அந்த வாய்ப்பை வழங்குவதற்கு குறித்த இருவரும் முயற்சித்தினர் என்பது எமக்கு தெளிவாக புரிகின்றது.