கனடா நோக்கிப் பயணித்த படகு மூழ்கிய நிலையில் சிங்கப்பூர் கடற்படையால் மீட்பு

0
313

இலங்கையை சேர்ந்த அதிகளவான தமிழர்கள் உட்பட கனடா நோக்கி பயணித்த படகு மூழ்கிய நிலையில் சிங்கப்பூர் கடற்படையால் காப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த படகில் 30 சிறுவர்கள் உட்பட 306 பேர் பயணம் செய்துள்ளனர். இலங்கையிலிருந்து கனடா நோக்கி அகதி தஞ்சம்கோரி பயணித்த படகு பிலிப்பைன்ஸை அண்டிய கடற்பரப்பில் மூழ்குவதாகவும் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பி.பி.சியின் முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன் தனது ருவிற்றர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். அந்தப் படகை காப்பாற்றுமாறு கோரி அதன் இறுதி ஜி. பி. எஸ். இடத்தையும் வெளியிட்டிருந்தார். இலங்கை நேரப்படி காலை 5.51 மணியளவில் அந்தப் படகுடனான இறுதித் தொடர்பு தொலைந்தது. அதிலிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலை நீடித்தது. இந்நிலையில், மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்தார். படகில் இருந்த இலங்கையர் ஒருவருடன் ஏற்படுத்தப்பட்ட தொடர்பின் மூலம் அந்தப்படகை காப்பாற்ற சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளின் உதவி பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். காப்பாற்றப்பட்ட படகு வியட்நாம் நோக்கி செல்கிறது என்று சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு தெரிவித்துள்ளனர் எனவும் அவர் கூறினார். உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்க அகதிகளாக உயிரைப் பணயம் வைத்து புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.