சீரற்ற கால நிலையால் யாழ்.மாவட்டம் பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்;பட்டுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபரி க.மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.அதேவேளை கொரோனா தொற்று நோய் தொடர்பிலும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
வங்களா விரிகுடாவில் மையம் கொண்ட புயல் முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் யாழ்.மாவட்டத்துக்கும்; சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்தப் புயல் காரணமாக கடும் மழை பொழியும், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும், கடும் காற்று வீசும். இந்தப் பாதிப்புக்கள் குடா நாட்டுக்கும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து முன்னெடுத்துள்ளோம்.
கடற்படை, இராணுவம், பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் இணைந்து ஒரு செயல்படுத்துகை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரம் கடமையிலிருந்து நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பார்கள்.
அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 30ஆம் திகதி முதல் மீனவர்களைக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளோம்.
அதேவேளை கடல்தொழிலாளர்கள் தமது படகுகளைப் பாதுகாப்பாக தரித்து விடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளோம். அத்துடன் தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவை ஏற்படின் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வேறு இடங்களில் தங்கவைக்க ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். அவ்வாறாக யாழ்.மாவட்டத்தில் 240 மையங்கள் தயார் நிலையிலுள்ளன.
கரையோர மக்கள் விழிப்பாக கால நிலைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். தாழ் நிலப் பகுதிகளில் வசிப்போர் விரும்பின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று தற்காலிகமாக தங்கமுடியும். அவ்வாறு தங்க வசதி இல்லாதோர் பொதுக் கட்டடங்களில் தங்கமுடியும்.
அதேவேளை இவ்வாறாக பொது இடங்களில் தங்கச் செல்வோர் தற்போதைய கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். சுகாதாரப் பிரிவினர் இது தொடர்பில் கண்காணிப்பர்.
அத்துடன் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியேறும் போது அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்குமாறு கோருகின்றோம். அது அவர்களையும் பாதுகாக்கும் இந்தச் சமூகத்தையும் பாதுகாக்கும்.
பிரதேச செயலாளர்கள் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட களப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள்களும் நாங்கள் மிக அவதானமாகச் செயல்பட வேண்டும்.
ஆபத்தான மரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும், அதேவேளை மின்சார தடைகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அத்துடன் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
திடீர் வெள்ளப் பெருக்கு உள்ளிட்டவற்றுக்கு முகம் கொடுக்க அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாணம் பாதிப்பினை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது இன்றும் நாளையும் 200 மில்லி லீற்றர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாளை மாலை வரை கால நிலை சீரின்மை இருக்கும். அதனால் மக்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு அவதானமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக கொரோனா நோய் தொற்று தொடர்பில் மிக அவதானமாக இருக்க வேண்டும் என மக்களைக் கோருகின்றோம் எனத் தெரிவித்தார்.