காலத்தின் சவால்களுக்கு ஏற்ப சட்டம் அல்லது நிறுவனங்கள் மாற வேண்டும்! – ஜனாதிபதி

0
41

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு நேற்று பிற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சுங்கத்திற்கு வழங்கப்பட்ட பொறுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை சீராக்க சுங்கம் மேற்கொண்ட முன்னெடுப்புகள் பாராட்டத்தக்கவை.

கடந்த ஆண்டு சுங்கம் அடைந்த இலக்குகளை நாங்கள் பாராட்டுறோம்.

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை, வருவாய் இலக்குகளை அடைவதன் மூலம் மட்டும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, வருமான விகிதத்தை அதிகரிக்க வேண்டும்.

பொருளாதார சரிவு காரணமாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சந்தை சுருங்கியது.

சர்வதேச நாணய நிதியத்தின் அளவீடுகளின்படி நாம் அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறோம். எனவே, மேலோட்டமாகப் பார்க்கும்போது பொருளாதார தேகம் மீண்டுவிட்டதாகத் தோன்றினாலும், முழு பொருளாதார கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொருளாதார நெருக்கடியை சீராக்க நாம் கவனமாக செயற்பட வேண்டும்.

ஒரு சிறிய தவறு கூட பொருளாதாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

எனவே, சுங்கத் திணைக்களம் 2550 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டுவதற்கு கூட்டாகச் செயல்பட வேண்டும்.

சுங்கத்திற்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலும் புதிய சம்பள அளவை ஸ்தாபிப்பது தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அது குறித்து நிதியமைச்சு, திறைசேரியுடன் கலந்துரையாடி தீர்வொன்றை வழங்க எதிர்பார்க்கிறேன்.

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

அரச சேவையை மேலும் திறம்படச் செயற்படுத்த, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

வலுவான நிறுவன கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

முன்னைய அரசியல் தரப்பு மற்றும் அரச சேவை பொறிமுறைக்கு இடையே முரண்பாடுகள் இருந்தன.

அந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த அரசியல் தரப்பில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களை சரியான நேரத்தில் மேற்கொள்ள முடியவில்லை.

சரியான நேரத்தில் நல்லதொரு நிறுவன கட்டமைப்பை உருவாக்க தவறியதால் எதிர்பார்க்கப்பட்ட பிரதிபலன்கள் கிடைக்கவில்லை.

அதனால் நாம் பல விடயங்களை கையகப்படுத்தும் முன்பாக வெளியாட்கள் அவற்றை கைப்பற்றிக் கொண்டனர்.

இதன் விளைவாக, இலங்கையின் இயற்கையான அமைவிடத்தைப் பயன்படுத்துவதற்கான சில வாய்ப்புகளை ஒரு நாடு என்ற வகையில் இழந்திருக்கிறோம்.

எதிர்காலத்தில் இலங்கை துறைமுகத்தில் 113 இலட்சம் கொள்கலன் செயற்பாடுகளை முன்னெடுக்க தேவையான முன்னெடுப்புகள் செய்யப்பட வேண்டும்.

அதற்கான கூட்டு முயற்சியை ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் நாம் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியாது.

இந்த வருடத்தில் சுங்க திணைக்களத்திற்கு 2550 பில்லியன் ரூபா வருமான இலக்கு வழங்கப்பட்டுள்ளது. என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் சர்வதேச சுங்க தினம் ‘சுபீட்சமான தேசத்தை உருவாக்க வினைத்திறனான சுங்கத் திணைக்களம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில் சர்வதேச சுங்க தின நிகழ்வு நேற்று பிற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, சிறப்பாக பணியாற்றிய 20 சுங்க அதிகாரிகளை பாராட்டும் விதமாக உலக சுங்க அமைப்பின் சான்றிதழ்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இரண்டு அதிகாரிகளுக்கு தகைமை விருதுகளும் வழங்கப்பட்டன.

அதனையடுத்து சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு சுங்க நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி கலாநிதிஅமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் உட்பட சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.