அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய இரண்டு சந்தேகநபர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பான நீதவான் பரிசோதனை கொழும்பு பிரதான நீதவான் கெமிந்து பெரேரா முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இதன்போது வாக்குமூலம் வழங்கிய கொட்டாஞ்சேனை காவல்நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர்இ கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிலியத்தலை பகுதியைச் சேர்ந்த அசோக லக்மால் ஜயவர்தன என அடையாளம் காணப்பட்டதாக குறிப்பிட்டார். குறித்த சந்தேகநபர் இராணுவத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றவர் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மற்றைய சந்தேகநபர் விஜயகுமார் பிரகாஷ் என்ற பெயருடைய நபர் என அடையாளம் காணப்பட்டதாகவும் கொட்டாஞ்சேனை காவல்நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் அறிவித்தார்.
இந்த குற்றச்செயல் டுபாயில் உள்ள ஷிரான் பழனி என்பவரின் வழிநடத்தலுக்கு அமைய இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் போது சில ஆயுதங்கள் மட்டக்குளி – காக்கை தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபர்கள் தெரிவித்தமைக்கு அமையஇ பலத்த பாதுகாப்புடன் அவர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு கடுமையான இருள் நிலவியதாகவும் மின்சூளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றதாகவும் கொட்டாஞ்சேனை காவல்நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் தெரிவித்துள்ளார்.இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் காவல்துறையினரைத் தாக்க முற்பட்டதுடன் தமது துப்பாக்கியையும் பறிப்பதற்கு முயற்சித்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
லக்மால் ஜயவர்தன என்ற சந்தேகநபரினால் தம்மிடமிருந்து துப்பாக்கி பறிக்கப்பட்ட பின்னர் ‘துப்பாக்கியைப் பறித்து விட்டார்கள் சூடு நடத்துங்கள்’ என்று தாம் சத்தமிட்டதாகவும் கொட்டாஞ்சேனை காவல்நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்தே அங்கு காவல்துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.