கொள்கைபிரகடன உரையின் பின்னர் உள்ள10ராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
தேர்தலை யாராலும் ஒத்திவைக்க முடியாது என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கின்றோம்.
தேர்தல் உரிமை என்பது அடிப்படை உரிமையாகும். அரசியலமைப்பிலும் இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலை பிற்போடுவது என்பது அடிப்படை உரிமையை மீறுவதை போன்ற செயலாகும்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது உயர்நீதிமன்றத்தின் கைகளிலேயே உள்ளது என்று அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலை நடத்துவதற்கே நீதிமன்றங்கள் இருக்கின்றன. தேர்தலை ஒத்திவைப்பதற்காக அல்ல என்பது குறித்த அமைச்சர்களுக்கு தெரியவில்லை.
எமது நாட்டின் நீதிமன்ற வரலாற்றை எடுத்துக்கொண்டால் தாமதமின்றி தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் முன்னின்று செயற்பட்டுள்ளன.
எனவே நீதிமன்றத்தினூடாக தேர்தலை ஒத்திவைப்பதற்கு யாரேனும் நினைப்பார்களாயின் அது நகைச்சுவைக்குரிய விடயமாகும்.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லையென்றாலும் நீதிமன்றத்தின் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை இருக்கின்றது.
ஏழு மாதங்களுக்கு பாராளுமன்ற கூட்டத்தொடர் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எமது நாட்டின் வரலாற்றில் ஏழு மாத காலத்துக்குள் பாராளுமன்ற அமர்வுகள் இரு தடவைகள் ஒத்திவைக்கப்படவில்லை. இதுவே முதல் தடவையாகும்.
பாராளுமன்றத்தை பலப்படுத்துவதாக கூறியே ஆட்சிக்கு வந்தனர். எனினும் பாராளுமன்றத்தை இன்று முழுமையாக பலவீனப்படுத்தியுள்ளனர்.
பாராளுமன்ற குழுக்கள் அனைத்தும் இன்று செயலிழந்துள்ளன. அந்தக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அனைத்தும் செயலிழந்துள்ளன.
நாளைய தினம் பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. கொள்கைப் பிரகடனத்தினூடாக பொருளாதார நெருக்கடியை வலியுறுத்தி தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்று அரச சார் பத்திரிகைளில் செய்திகள் வெளியிட்டுள்ளன.
கொள்கை பிரகடன உரையில் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் மட்டுமே உள்ளடங்கும். கொள்கை பிரகடன உரை பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அது ஒரு நோக்கத்துக்கானது மட்டுமே.
கொள்கை பிரகடன உரையின் பின்னர் நீதிமன்றம் பயந்து தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.