சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!

0
220

சமூக வலைத்தளங்களில் கொரோனா தொற்று மற்றும் அரச தீர்மானங்கள் குறித்து திரிபுபட்ட தகவல்களை வெளியிடும் நபர்களை கைது செய்ய சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள விசேட பொலிசாருக்கு எதிராக கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் ஜயசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகம் உட்பட சில அரச இணையத்தளங்களில் பாரிய சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாக கூறி பகிரப்பட்ட பொய்யான தகவல் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது ஆள் அடையாளம் போன்ற தகவல்களை பொலிசார் வெளியிடவில்லை.
எனினும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவரான ரஜீவ் மத்தியூ இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அரசாங்கத்தினால் போலி தகவல்களை வெளியிடுவோரைக் கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொலிசாருக்கு எதிராக சுதந்திர ஊடக இயக்கம் கடும் எதிர்ப்பை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தபோது:
சிறிலங்காவில் விசேடமாக கோவிட் தொற்று மற்றும் அரசாங்கம் வெளியிடுகின்ற தகவல்கள் குறித்து விமர்சனம் வெளியிடுவோர், எதிர் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு எதிராக விசாரணை செய்ய விசேட பொலிஸ்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது மிகவும் பயங்கரமான மற்றும் நாட்டு மக்களின் கருத்துரிமைச் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறுகின்ற முயற்சியாகும். நாட்டில் இடம்பெறுகின்ற விடயங்கள் குறித்து வெளியாகின்ற தகவல்களின் உண்மை நிலைமை மற்றும் தகவல்களை சரிப்படுத்திக்கொள்ள மக்களுக்கு இருக்கின்ற உரிமையை மறைத்து, சிலரிடம் உள்ள தகவல்களை மாத்திரம் நாட்டு மக்கள் மத்தியில் வெளியிட தெரிவிக்க முயற்சிக்கப்படுகின்றது. ஊழல்வாதிகள், சர்வாதிகாரிகளின் ஆட்சியை தக்கவைக்கவும் அவற்றிற்கு விமர்சனம் ஏற்படாத வகையிலும் சூழலை ஏற்படுத்திக்கொள்ளவும் மக்களை அதற்குப் பழக்கவும் இந்த அச்சுறுத்தல் மேற்கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுகிறது. பொலிஸ்துறைக்குப் பொறுப்பான அமைச்சரின் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் மக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட தகவல்களே அரசாங்கம் தற்போது எடுத்திருக்கின்ற இந்த தீர்மானத்திற்குக் காரணம் என்று கூறினால் இது வெட்கக்கேடான காரியமாகும். இதற்கு அனுமதிக்கக்கூடாது. ஜனநாயகவாத ஊடக சுதந்திர நாட்டில் இதுபோன்ற அரச செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் எழுந்துநிற்க வேண்டும். இதனை அனுமதித்துவிட்டால் ஊமை, செவிட்டு சமூகமாக சிறிலங்கா மாறிவிடும்- என்றார்.