அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை இதுவரையில் குறைக்க முடியவில்லை எனவும் ஜனாதிபதி சிறைக்கைதியாக மாறியுள்ளார் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அமைச்சர் கெஹெலிய பொறுப்புக் கூறவேண்டும். மருந்துத் தட்டுப்பாடு, தரமற்ற மருந்து கொள்வனவு, அவசர மருந்து கொள்வனவு மாஃபியா என அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தரமற்ற மருந்துகள் கொள்வனவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவும் ஒப்புக்கொண்டுள்ளது. ஊழல்கள் நிரூபிக்கப்படும்போது முன்வந்து அவரே பதவி விலகியிருக்கவேண்டும்.
இருப்பினும் அவர் அவ்வாறு செய்யவில்லை. தற்போது நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
மொட்டுக் கட்சியினர் அவருக்கு ஆதரவு வழங்கலாம். அவரை பாதுகாக்கலாம். ஆனால் மக்களை ஏமாற்றமுடியாது. தேர்தல் மூலம் இந்த அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள். மேலும் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை இதுவரையில் குறைக்கமுடியவில்லை. ஜனாதிபதி சிறைக்கைதியாக மாறியுள்ளார்.
எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிக்கவேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இரண்டு வழிகள் காணப்படுகிறன. ஒன்று மொட்டுக் கட்சியுடன் இணைந்து பயணிக்கவேண்டும். இல்லாவிட்டால் மொட்டுக் கட்சியிலிருந்து விலகி வெளியில் வரவேண்டும்.
இவ்வாறின்றி இந்த இரண்டு கட்சிகளும் இணைய வாய்ப்பில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் அடுத்த தேர்தலின்போது ரணிலுக்கு மொட்டு கட்சியினர் ஆதரவு வழங்குவார்கள் எனக் கூறுகிறார்கள். மொட்டுக்கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை. யார் எந்தக் கட்சி என்று எமக்கு விளங்கவில்லை. பல்வேறு நாடுகளிலிருந்து வருகைதந்து நாட்டு மக்களுக்கு நிவாரண ரீதியில் எரிபொருள் விநியோகிப்பதாக ஆரம்பத்தில் கூறி எரிபொருள் நிறுவனத்தை ஆரம்பித்தனர். இருப்பினும் 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் ஊழல் இருக்கிறது. பொறுப்புகளில் உள்ளவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் நாட்டு மக்கள் மேலும் நெருக்கடிகளுக்குள் தள்ளப்படுகிறார்கள். அன்றாடம் வாழ்க்கைச் செலவைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் வாழ்கிறார்கள்’ என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.