டிக்டொக் கிரிசமனின் பேஸ்புக் பக்கம் முடக்கம்!

0
145

கிரி சமன் என்ற இளைஞரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது சிறுமி உட்பட நூற்றுக்கணக்கான சிறுமிகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பேஸ்புக் பக்கம் உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேற்படி பேஸ்புக் பக்கத்தை நிர்வகித்து வந்த நபரிடம் வாக்குமூலம் பெற்றதுடன், புகைப்படம் எடுப்பதற்கும் திருத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட கமராக்கள், கணினிகள் மற்றும் பிற உபகரணங்களையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது.

அவர் தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று நீதிமன்றுக்கு அறிவிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இராஜகிரிய – கலபலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த மேற்படி சந்தேகநபர், கிரி சமன் என்ற பெயரில் டிக்டொக் சமூகவலைத்தளத்தில் இயங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், 11 வயது சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் குறித்த சிறுமியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று போதைப்பொருளை கொடுத்து துஷ்பிரயோகம் செய்தார் என்று சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.