அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமர் செலன்ஸ்கி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நன்றி யுக்ரேனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு எனக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உள்ளிட்டோரை செலன்ஸ்கி சந்தித்துக் கலந்துரையாடினார். எனினும் அந்தக் கலந்துரையாடல் இறுதியில் குழப்பத்துடனேயே நிறைவுற்றது.
இதன் தொடர்ச்சியாகஇ யுக்ரேனுக்கு ஆதரவு அளித்து வரும் ஐரோப்பிய நாடுகளின் உச்சி மாநாடு நேற்று (02) லண்டனில் நடைபெற்றது. பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நடத்திய இந்த பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட 18 தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், ஐரோப்பிய நாடுகள் யுக்ரேனுக்கு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தின. மேலும், பிரித்தானிய, யுக்ரேனுக்கு கடன் வழங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. இந்த மாநாட்டை அடுத்து செலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.
அமைதி உண்மையானதாக இருக்க, யுக்ரேனுக்கு உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை எனும் முக்கிய பிரச்சினையில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர்.
பிரித்தானிய உள்பட ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்தின் நிலைப்பாடு இதுதான். அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அமெரிக்காவிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நன்றியை உணராத நாள் இல்லை.
இது நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு. எங்களுக்குத் தேவை அமைதிஇ முடிவில்லாத போர் அல்ல. அதனால்தான் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இதற்கு முக்கியம் என்று நாங்கள் கூறுகிறோம்.’ என அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.