திருகோணமலை -கிண்ணியா பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட, மகாமாறு குளத்துக்கட்டு வீதி, கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பயணம் செய்ய முடியாத அளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதி, கல்லடிவெட்டுவான், சுங்கான்குழி, நடுவூற்று, குரங்குபாஞ்சான் மற்றும் தீனேரி ஆகிய விவசாய கிராமங்களை இணைக்கின்ற ஒரு முக்கியமான வீதியாகும்.
இந்த விவசாய கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் மேட்டு நில பயிர்ச்செய்கை, கால்நடை பண்ணைகள் என கிண்ணியா பிரதேசத்தின் பொருளாதார முதுகெலும்பாக இந்தப் பகுதியே அமைந்துள்ளது.
நாளாந்தம் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களும் இந்த வீதியை பயன்படுத்தி
வருகின்றனர். கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக, இந்த மக்கள் இதே துன்பத்தைத்தான் அனுபவித்து வருகின்றனர்.
பெரும்போக அறுவடை ஆரம்பித்திருக்கின்ற நிலையில், இந்த வீதியின் ஊடாகவே நெல்லை கொண்டு செல்வது பாரிய சிரமத்தையேற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது தொடர்பாக இந்தப் பகுதியில் உள்ள சமூகமட்ட அமைப்புக்கள் அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.