திருகோணமலை, பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்யப்படும் – ரணில் விக்ரமசிங்க

0
66

திருகோணமலை, பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்யப்படும் எனவும், இந்த திட்டத்திற்காக, இந்தியாவுடன் ஆழமான கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில், மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்த பின்னர், காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில், இவ்வாறு குறிப்பிட்டார்.

திருகோணமலையை, பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம்.அண்மையில், இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கைக்கு வருகை தந்த போது, அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவது குறித்து, கலந்துரையாடல் இடம்பெற்றது.

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ், இந்தப் பகுதிகளில், பாரியளவிலான விவசாய செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில், அபிவிருத்தி செய்யப்படாத மகாவலி காணிகளை அபிவிருத்தி செய்யும் திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வெருகலாறு முதல் அறுகம்பே வரையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கோட்டையை, தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் சுற்றுலாத்துறைக்காக அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர், இந்தப் பிரதேசத்திற்கு ஒரு சிறந்த ஹோட்டல் கிடைக்கும்.
இப்பகுதியில் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு, பொருளாதார மாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பாரிய பணிகள் இங்கு செயற்படுத்தப்படவுள்ளன.

திருகோணமலையை பிரதான ஏற்றுமதி பொருளாதா மையமாக மாற்ற முடியும்.
கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இங்கு அமைந்துள்ளன.இப்பிரதேசத்தில் கல்வியை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

தொழிற் கல்வித்துறையின் சீர்திருத்தத்தின் மூலம், அதிகளவான இளைஞர்களுக்கு, தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்க முடியும்.மூன்று, நான்கு ஆண்டுகளாக, ஆசிரியர்களை நியமிக்க முடியாததால், பாடசாலைக் கல்வி மேம்பாட்டிற்காக, இன்று ஆசிரியர் நியமனமும் வழங்கப்பட்டது.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், ஒரு பாரிய பிரச்சினையாக மாறிவிட்டது.
அதற்கேற்ப, புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
நாங்கள் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொண்டோம்.
நாட்டின் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு மீண்டும் அபிவிருத்தி அடையும் போது, அந்த மக்களை ஒருபோதும் மறக்க மாட்டோம்.காணி உறுதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு, மக்கள் மாவட்ட செயலகத்திற்கோ பிரதேச செயலகத்திற்கோ செல்லத் தேவையில்லை.
மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோர் கிராமத்திற்குச் சென்று, காணி உறுதிகளை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வார்கள்.
எதிர்வரும் திங்கட்கிழமை, அந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்து, விரைவில் நிறைவு செய்ய அறிவுறுத்தியுள்ளேன்.