இவ்வாரம் முதல் ரயில் சேவை மட்டுப்படுத்தப்படும். ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ரயில்வே திணைக்களம் விரைவில் தீர்வு வழங்காவிடின் தொடர் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானிப்போம் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமவடு தெரிவித்தார்.
மருதானையில் உள்ள ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
ரயில் சேவையில் 1000இற்கும் மேற்பட்ட தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. வெற்றிடங்களுக்குத் சேவையாளர்களை இணைத்துக் கொள்ள ரயில்வே திணைக்களம் இதுவரையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
4000 ஆயிரம் கனிஷ்ட ஊழியர்களுக்கான வெற்றிடமும், 250 ரயில் நிலைய பொறுப்பதிகாரி சேவையிலும் வெற்றிடம் நிலவுகிறது.
ரயில் போக்குவரத்து சேவையில் சமிக்ஞை காட்டுபவர்களின் சேவையிலும் வெற்றிடம் நிலவுகிறது. சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் சமிக்ஞை காட்டுபவர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு 6 மாத காலமாக சம்பளம் வழங்காத காரணத்தால் இவர்கள் நாளை முதல் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் மூன்று மொழிகளிலும் அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும் என அரச கரும மொழிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆனால் சிங்கள மொழியில் மாத்திரமே அறிவித்தல் விடுக்கப்படுகின்றன. இச்சேவையிலும் 100 வெற்றிடங்களும், ரயில் நிலைய சுகாதார சேவையாளர் சேவையில் 320 வெற்றிடங்களும் நிலவுகின்றன.
சேவையாளர்களின் பற்றாக்குறையுடன் ரயில் சேவை முன்னெடுக்கப்படுகின்றன. இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் பலர் சேவையிலிருந்து விலகியுள்ளனர். அதனால் இவ்வாரம் முதல் ரயில் சேவைகள் பெரும்பாலும் மட்டுப்படுத்தப்படும்.
ரயில் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்குச் சேவையாளர்களை விரைவாக இணைத்துக்கொள்ள ரயில்வே திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இல்லாவிடின் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்- என்றார்.