
சாவகச்சேரி நகர சபையின் நுணாவில் பொது நூலகத்தில் வைத்து பசு மாட்டை இறைச்சியாக்கி விற்பனை செய்த பொதுநூலக ஊழியர் உட்பட்ட இருவர் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நுணாவில் பொதுநூலகத்துக்கு அருகிலுள்ள காணியில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்ட பசுமாடு காணாமல் போனது.
இந்த நிலையில் பசுவின் உரிமையாளரும் அப்பகுதி இளைஞர்களும் தேடுதல் நடத்திய போது நூலக மதிலுக்கு அருகில் மாட்டின் தலை உள்ளிட்ட பாகங்களைக் கண்டனர்.
இதையடுத்து நூலகத்துக்குள் நுழைந்து பார்த்த பொழுது நூலக குளியலறைக்குள் வைத்து பசுவை இறைச்சியாக்கிய இரத்தக்கறைகளைக் கண்டுள்ளனர்.
இதனால் நூலக ஊழியர் மீது சந்தேகமடைந்த இளைஞர்கள் ஊழியரை விசாரித்த பொழுது இன்னொருவருடன் இணைந்து புதன்கிழமை கடமை நேரத்தில் மதியம் 1.00 மணியளவில் பசுவை இறைச்சியாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து மற்றையவரையும் பிடித்த இளைஞர்கள் நூலகத்தை உடனடியாகவே மூடி சாவகச்சேரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து இருவரையும் ஒப்படைத்தனர்.
இருவரையும் கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.
இந்த நிலையில் சாவகச்சேரி நகர சபை நூலக ஊழியர் பசுமாட்டைத் திருடி இறைச்சியாக்கி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விடயம் வெளியில் தெரிந்தால் நகர சபையின் பெயருக்கு அவதூறு ஏற்படும் எனத் தெரிவித்து இளைஞர்களோடு சமரச முயற்சியில் நகர சபை அதிகாரிகள் சிலர் ஈடுபட்ட போதும் இளைஞர்கள் அதற்கு சம்மதிக்காமல் இப்படியான ஊழியர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.