புதிய வகை வைரஸ் பரவல் குறித்து GMOA எச்சரிக்கை

0
549

ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை வைரஸ் தொற்று இனங்காணப்படுகின்ற நிலையில் , இலங்கையில் மேலும் கொவிட்-19 வைரஸ் பரவாதிருக்க பிரதேசங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது அத்தியாவசியமானதாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை வலியுறுத்தினார். இதன் போது அவர் மேலும் கூறுகையில் , 

ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் கொவிட் தொற்றும் மேலும் தீவிரமாக பரவக் கூடும். எனினும் இது எதிர்பார்க்கக் கூடிய நிலைமை என்பதை தெரிவிக்க வேண்டும். வழமையாகவே வைரஸ் தாக்கங்களின் சுபாவம் இவ்வாறு தான் காணப்படும். இதனை உலக சுகாதார ஸ்தாபனமும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில் சுகாதார தரப்பினரும் பொது மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். முழு நாட்டையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படாமலிருப்பதற்கு பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை மேலும் அதிகரித்து , முடிந்தவரை போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதன் போது பிரதேசங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். இதன் மூலமே நாடளாவிய ரீதியில் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முடியும் என்றார்.