பெரியம்மை நோயால் கால்நடைகள் பாதிப்பு

0
191

நாட்டில் பல மாவட்டங்களிலும் கால்நடைகள் மத்தியில் பெரியம்மை நோய்த் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் சிலரது கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஒருவர் 2 சவாரி மாடுகள் வளர்த்து வந்த நிலையில் அதில் ஒன்று பெரியம்மை நோய்த் தாக்கம் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பே இறந்துள்ளதாகவும் மற்றைய கால்நடை ஒன்றும் பெரியம்மை நோய்த்தாக்கம் காரணமாக உணவு இன்றி நீர் கூட அருந்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் கால்நடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிடம் இருந்து நாளாந்தம் பெறப்படுகின்ற பாலின் அளவும் குறைந்து காணப்படுவதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்பொழுது கால்நடைகளுக்கான மருந்து வகைகளின் விலைகள் பலமடங்கு அதிகரித்து காணப்படுவதாகவும் கால்நடைகளை கொள்வனவு செய்து வளர்க்க முடியாத நிலையில் இருப்பதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.