அம்பாறை மாவட்டத்தில் பயங்கரவாத வன்செயல்களால் பாதிக்கப்பட்ட சாதாரண பொது மக்கள் மற்றும் சர்வமத வழிபாட்டுத் தலங்கள் என்பனவற்றுக்கான அரசின் நட்டஈடு தொகைக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் இருந்து நட்டஈட்டுக்காக விண்ணப்பித்து கோவைகளைப் பூர்த்தி செய்த 27 நபர்களுக்கும் 4 இந்து பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கும் இவ்வாறு நட்டஈட்டுத் பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டு இருந்தன.
அந்தவகையில் 27 தனிநபர்களுக்கும் மொத்தத் தொலையாக சுமார் 23 இலட்சம் ரூபாவும் ஒரு இந்து ஆலயம் மூன்று பௌத்த தலங்கள் உட்பட நான்கு மத வழிபாட்டு தலங்களுக்கும் மொத்த தொகையாக 30இலட்சம் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டு அதற்கான காசோலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நட்டஈட்டுக் காசோலைகளை வழங்கி வைத்திருந்ததுடன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் இழப்பீட்டுக்கான அலுவலக அதிகாரிகள் சர்வமத குருமார்கள் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.