மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு,பட்டாபுரம் பகுதியில் சிலை மற்றும் மட்பாண்ட வடிவமைப்பு தொழிலில் பயிற்சிகள் பெறும் மாணவர்களின் நன்மை கருதி மூலப்பொருள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.சுவிஸில் உள்ள தாய்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் டி.எல்.சுதர்சனின் ஆலோசனையின் கீழ் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் சமூகசேவையாளருமான துரைநாயகத்தின் வழிகாட்டலின் கீழ் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மூலபொருட்கள் இதன் போது வழங்கப்பட்டது.
சுவிஸ் உதயம் கிழக்கு மாகாண தலைவரும் முன்னாள் பிரதி வலய கல்விபணிப்பாளருமான மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சுவிஸ் உதயம் கிழக்கு மாகாண செயலாளர் ரொமிலா செங்கமலன்,பிரதி செயலாளரும் ஊடகவியலாளருமான நடனசபேசன் உட்பட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த சிலை மற்றும் மட்பாண்ட வடிவமைப்பு நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளதுடன் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அழிந்துவரும் தமிழர்களின் பாரம்பரிய கைத்தொழில்களை பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு வழங்கவேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறையினருக்கு உள்ளது என முன்னாள் வலய கல்வி பணிப்பாளரும் சுவிஸ்உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவருமான மு.விமலநாதன் தெரிவித்தார்.