மட்டக்களப்பில் புகைத்தல் எதிர்ப்பு
தின நிகழ்வுகள் முன்னெடுப்பு

0
232

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இன்று மட்டக்களப்பு நகர் பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர கட்டுப்பாட்டுசபை மற்றும் மாவட்ட செயலக போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவும் இணைந்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது புகைத்தல் உட்பட போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் ‘வாழ்க்கை இன்பமானது – மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்ளுங்கள்’ எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரங்கள் இதன்போது பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மாவட்ட இணைப்பாளர் பீ.டினேஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் பங்குபற்றி ஆரம்பித்து வைத்ததுடன், இந்நிகழ்வில் மண்முனை வடக்கு மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேச செயலகங்களின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள்மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆண்டுதோறும் மே 31 திகதி சர்வதேச புகைத்தல் தினம் அனுஸ்டிக்ககப்பட்டு வரும் அதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தில் அங்கம் வசிக்கும் அனைத்து நாடுகளும் 1987 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தினத்தை அனுஸ்டித்து வருகின்றது.

உலக சுகாதார ஸ்தாபனமானது 2022 ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்திற்கான உலகலாவிய கருப்பொருளாக ‘புகைப்பொருள் நமது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலானது’ என பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.