மட்டக்களப்பு மாநகர நிர்வாக எல்லைக்குட்பட்ட பனிச்சையடி பண்ணை வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி டான் செய்தி பிரிவு ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.
சுமார் 40 வருடகாலமாக பனிச்சையடி பண்ணை வீதி பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அப்பகுதிக்கான வீதி புனரமைக்கப்படாத காரணத்தினால் தமது அன்றாட தேவைகளுக்காக அவ் வீதியூடாக பயணிப்பதில் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டிருந்தனர்.
குறித்த வீதி தொடர்பாக பனிச்சையடி இரண்டாம் வட்டார உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான தயாளக்குமார் கௌரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த வீதிக்கான நிதி உலக வங்கியின் நிதியின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளூர் மேம்பாட்டு ஆதரவு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குறித்த வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் உலக வங்கியின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளூர் மேம்பாட்டு ஆதரவு அபிவிருத்தி திட்டத்தினூடாக பனிச்சையடி பண்ணை வீதியினை 9.23 மில்லியன் ரூபா நிதியில் காபட் வீதியாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பனிச்சையடி இரண்டாம் வட்டார, மாநகர சபை உறுப்பினர்களின் வேண்டுகோளின் கீழ் மாநகர முதல்வர் தியாகராஜ சரவணபவன், மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல் தலைமையில் குறித்த வீதிக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், ஆலய நிர்வாக சபையினர், கிராமமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.