மட்டு – ஏறாவூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : 2வது நாளாக இன்று விசாரணை!

0
126

மட்டக்களப்பு -ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பெண்கள் உயர்தர பாடசாலையொன்றில் ,ஆங்கில பாட ஆசிரியர் ஒருவரால் 29 மாணவிகளுக்கு
பாலியல் தொல்லை ஏற்படுத்தியதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மேலதிக நீதிபதியும் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான எஸ். அன்வர் சாதாத் முன்னிலையில், இரண்டாவது நாளாகவும் இன்று விசாரணை நடைபெற்றது.
வழக்கில் மாணவிகள், ஆசிரியைகள், அதிபர் மற்றும் பிரதி அதிபர் உட்பட நாற்பது பேருக்கு சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டது.
சாட்சியங்கள் கட்டம் கட்டமாக பதிவு செய்யப்பட்டதுடன், முதலாம் நாள் ஐந்து பேரின் சாட்சியங்களும் இரண்டாம் நாள் பத்துப்;பேரின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.
இதேவேளை, சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை என்பதனால், இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 04.08.2023 வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் 2019ம் ஆண்டு தரம் ஏழு பி வகுப்பு பிரிவில் கல்வி கற்ற மாணவிகள் மீது, ஆங்கில ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மட்டக்களப்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால், ஏற்கனவே நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில், அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்;டமை குறிப்பிடத்தக்கது.