மட்டு. வாகரையில் கரையோர மீன் பிடித்தொழில் பாதிப்பு: மீனவர்கள் கவலை

0
662

மட்டக்களப்பு வாகரை பிரதேச கடல் பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் நடவடிக்கையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோர் ஈடுபடுவதால் தமது கரையோர மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்ததைச் சேர்ந்த இலங்கைத்துறை முகத்துவாரம், வெருகல் முகத்துவாரம், சீனன் வெளி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு தமது கடல் பரப்பிற்குள் புகுந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித் தொழில் ஈடுபடுவதாக வாகரை கதிரவெளி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவர்களது நடவடிக்கையால் கரையோர மீனவர்களது கரைவலை மீன்பிடி,வலை வீச்சு, கட்டு வலை கட்டுதல், தூண்டில் போடுதல் போன்ற மீன்பிடி தொழில் நடைமுறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலானோர் தமது கரை வலை தொழிலை கைவிட்டுள்ளனர்.

இரவு வேளைகளில் கதிரவெளி கடல் பரப்பிற்கு வரும் இவர்கள் சக்தி வாய்ந்த ஒளிக் கருவிகளை பயன்படுத்தி, இயந்திரப் படகுகள் மூலம் மீன் பிடித்தலில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கரையை வந்தடையும் மீன்களை கலைத்தும் நவீன உபகரன வசதிகளுடன் இவ்வாறு மீன் பிடிப்பதனால் கடலில் கலைவு ஏற்பட்டு மீன்கள் வேறு இடங்களுக்கு செல்வதால் வழமைபோல் மீன்கள் கரைக்கு வராததால் மீன் பிடியில் பாதிப்பு ஏற்படுகவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாவட்ட மற்றும் பிரதேச மீனவர் திணைக்களத்தில் இது தொடர்பாக முறையிட்டால் கடற்படையினர் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று பதில் கூறுவதுடன் ஒலி பெருக்கி மூலம் இவ் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுதல் விடுக்கின்றனர்.

இவ்வாறு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பதில் தெரிவிப்பதால் தங்களது ஜீவநோபாயத் தொழிலை தற்போது நிலவும் கொரோனா தொற்று காலத்தில் கைவிட வேண்டிய நிலை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு மாதாந்தம் வாழ்வாதாரக் உதவிக் கொடுப்பனவை வழங்க முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களது இச்செயற்பாடு இன்று மட்டுமல்லாமல் பல காலமாக இடம்பெற்று வருவதாகவும் இதனை தடுத்து தருபவர்களுக்கு வாக்களிப்பதாக நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கோரிக்கை முன்வைத்து அதன்படி செயற்பட்டும் பலன் ஏதும் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

எனவே இவ் விடயத்தில் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனமெடுத்து குறித்த விடயத்திற்கு நடவடிக்கை எடுத்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.