மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு பாலம் அமைத்துக் கொடுக்கப்படாததால், சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக மடுக்கரை, முள்ளிமோட்டை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளுக்கு அருகாமையில் அருவி ஆற்றின் கிளை ஆறு ஓடிக் கொண்டிருப்பதால் தற்காலிக பாலம் கூட அமைத்துக் கொடுக்கப்படாமல் ஆற்றில் இறங்கியே ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும், மழை காலங்களில் ஆற்றில் நீர் நிறைந்து ஓடுவதால் அன்றாட கடமைகளை செய்ய முடியாமல் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், பாடசாலை மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மடுக்கரை மற்றும் முள்ளிமோட்டை கிராமத்தில் உள்ளக வீதிகளை சீரமைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகள் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் தமது கிராமத்து மக்கள் மீது அக்கறை கொண்டு தற்காலிகமாக பாலம் அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மடுக்கரை முள்ளிமோட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.