மருதமுனை மசூர் மௌலானா
விளையாட்டு மைதானத்தில் போட்டி

0
276

பொலிஸ் திணைக்களத்தின் 156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த ‘பொலிஸ் வெற்றிக் கிண்ண’கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த இரு தினங்களாக மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.21கழகங்கள் பங்கு பற்றிய சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு மருதமுனை எலைற் விளையாட்டு கழகம், மிமா விளையாட்டுக்கழகம் என்பன தெரிவாகியிருந்தன.அணிக்கு ஏழு பேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியாக நடைபெற்ற இச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை மின்னொளியில் (7) நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய எலைற் விளையாட்டு கழகத்தினர் ஐந்து ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.ஐந்து ஓவர்களில் 51 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற நிலையில் துடுப்பெடுத்தாட களம் இறங்கி மிமா விளையாட்டு கழகம் ஐந்து ஓவர்கள் முடிவில் 33 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சுற்றுப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றது.

17 மேலதிக ஓட்டங்களால் வெற்றி பெற்ற எலைற் விளையாட்டு கழகம் 2022 ஆம் ஆண்டுக்கான பொலிஸ் தின சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.வெற்றி பெற்ற அணிக்குரிய சம்பியன் கிண்ணத்தை நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மருதமுனை எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர் அப்துல் அஸீஸ் கபீல் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.டி.எம்.எல் புத்திக, பெரியநீலாவனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜி. துஸார திலங்க ஜெயலால், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.சி.எஸ். ரத்நாயக்க, சட்டத்தரணி நப்ஸார், அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஜெ.அப்துல் ஹசீப், டொக்டர். சசியாப்பா, உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம். ரஜி, ஈஸ்டன் யூத் விளையாட்டு கழகத்தின் செயற்குழு தலைவர் ஏ.எம்.இப்றாஹிம் உட்பட மருதமுனை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், ரசிகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.