மருந்து கொள்முதல் தொடர்பில் புதிய உத்தரவு பிறப்பிப்பு

0
98
மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனே புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மட்டுமே இலங்கைக்குள் கொண்டு வருமாறும், பதிவு செய்யப்பட்ட மருந்துகள் இல்லாத பட்சத்தில், மேற்படி மருந்துகள் பற்றிய தேவையான தரவுகளை சரிபார்த்து, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) அனுமதியுடன் அவற்றை வாங்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இன்று சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது NMRA, அரச மருந்துக் கூட்டுத்தாபனம், அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.மேற்கூறிய முறைக்கு புறம்பாக யாராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனே எச்சரித்துள்ளார்.அவசர கொள்முதலின் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்வதை நிறுத்தி வைக்கவும், பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட முறையில் விரைவில் வழங்க ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.புற்றுநோய், சிறுநீரக நோய்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், இந்த மருந்துகளை தட்டுப்பாடின்றி பராமரிக்கவும், தேவையான அனைத்து மருந்துகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் சுகாதார அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.