;“மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸை ஒழிப்பேன்” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு, வழக்கு விசாரணைக்கு வருகைதந்த பிள்ளையான், வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை, கார்த்திகை 27 மாவீரர் தினத்தையும் அவர் இங்கு ஞாபகப்படுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் நேற்று (10) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, இம்மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதேவேளை, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்க வேண்டாமென அரச தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட வாதமும் நிராகரிக்கப்பட்டதுடன், சிறைச்சாலை ஆணையாளர் அனுமதி வழங்கினால் மாத்திரம் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமெனவும் நீதிபதி தெரிவித்தார்.