முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் தமக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்பள்ளி ஆசிரியர்களாக நீண்டகாலமாக கடமையாற்றுகின்றபோதும், தமக்கான சம்பளமாக ரூபா 6 ஆயிரமே வழங்கப்படுவதாகவும், இதனால் பொருளாதாரச் சிக்கல் நிலையோடு தமது வாழ்க்கையை கொண்டு நடாத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கவலை வெளியிட்டனர்.
சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிவித்தும் இதுவரை தமக்கான உரிய தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை என்ற விரக்திநிலையிலேயே கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
‘எம் விதியை மாற்று எமக்கு வழிகாட்டு!’, ‘6ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு தொகை இன்று போதுமா?’, ‘நிரந்தர நியமனம் வேண்டும்!’ போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு, முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் இறுதியில் தங்களது கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜரை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை செவிமடுத்த முல்லைத்தீவு மாவட்ட மேலதி அரசாங்க அதிபர், வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் கல்வியமைச்சின் கவனத்திற்கு முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூற நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.