முழு நாட்டையும் விற்பனை செய்வதற்கே முயற்சி – வசந்த சமரசிங்க

0
179

மக்கள் வழங்கிய ஆணையை பயன்படுத்தி முழுநாட்டையும் விற்பனை செய்வதற்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணை இல்லாத ரணில் ராஜபக்ஷ அரசாங்கமானது, அரங்கேற்றிக்கொண்டு இருக்கும் மக்கள் விரோத, ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைவது அவசியம்.

அரசாங்கமானது ஹம்பாந்தோட்டையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தனியார்மயப்படுத்துவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட ஒருவருக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய முயன்றபோது ஹம்பாந்தோட்டைக்குச் சென்று மக்களை அணித்திரட்டி நாம் அந்த முயற்சியை தடுத்து நிறுத்தினோம்.

அன்று இந்த அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையை இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முழு நாட்டையும் விற்பனை செய்வதற்கு தயாராகி வருகின்றார்.

இந்த ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை என்பது கிடையாது.

எனினும் தற்போதைய ஜனாதிபதி நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்கு உட்படுத்தி, உலகத்துக்கு முன்பாக புதிய சட்டத்தை உருவாக்குவதாகக் கூறி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவந்து தொழிற்சங்கங்களின் போராட்டங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்வாறான சட்டத்தைக் கொண்டு போராட்டங்களை முடக்கலாம் என்று ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவோ நினைப்பார்களாயின் அதற்கு இடமளிக்கப்போவதில்லை என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.